அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

இயேசுவும் பொந்தியு பிலாத்துவும்

 
இயேசுவை யூத சமயத் தலைவர்கள் கொல்லத் திட்டமிட்டிருந்த விவரத்தை சுவிசேகர் மத்தேயு இவ்வாறு எழுதியுள்ளார்: “....... சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி (27:1)

ஆனால் தனது அடியாராகிய இயேசுவை சிலுவை மரணத்திலிருந்தும், கொடியவர்களின் கையிலிருந்தும் காப்பாற்றும் திட்டத்தினை திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘(ஈஸாவின் பகைவர்களாகிய) அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும் திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டுபவர்களுள் அல்லாஹ் மிகச் சிறந்தவன். (3:55)

ஆதார நூல்கள்

இயேசு உயிர்தெழுந்ததாகக் கருதப்படும் புனித ஈஸ்டர் தினத்தை ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவ உலகம் கொண்டாடி வருவதை நாம் அறிவோம். இயேசு கிறிஸ்து தேசாதிபதியான பொந்தியு பிலாத்து (Pontius Pilate) வால் விசாரிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொடுந்துயருற்றதும். சிலுவை மரத்திலிருந்து அவர் கீழே இறக்கப்பட்டதும் உலகம் முழுவதும் ஈஸ்டர் தினத்தையொட்டி சர்ச்சுகளில் கிறிஸ்தவ மக்களுக்கு விரிவாக எடுத்தோதப்படுவதும் வழக்கம். யூதேயா மாநிலத்தில் அப்போதைய ரோமானிய ஆளுனராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை சிலுவை சம்பவத்திலிருந்து விடுவிப்பதில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதை சுவிசேஷங்கள் தெளிவுபடுத்துகிறது. அவை தவிர வேறு சில ஆதார நூல்களும் பிலாத்துவின் நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவுகின்றன.

பிளேவியஸ் ஜோசபஸ் என்னும் யூத வரலாற்று நிபுணரின் யூதப் போர் (Bellum Judaicum) என்னும் நூலில் பிலாத்து பற்றியும் யூதர்களின் சதித்திட்டம் பற்றியும் முழு விளக்கங்கள் காணக்கிடக்கின்றன. இந்த வரலாற்றாசிரியர் யூத சமயப் பிரிவுகள் மூன்றினில் பரிசேயர்கள் (Pharisees) என்ற கூட்டத்தை சேர்ந்தவர். கி.பி 37 இல் பிறந்த இவர் யூத ஆசாரியனாகத் தம் வாழ்வைத் தொடங்கினார். பரிசேயர்கள், சதுசேயர்கள், எஸ்ஸீன்கள் (Sadducees & Esseens) என்ற மூன்று யூதப் பிரிவுகளில் நம்பிக்கைகள், சமயப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் குறித்து விரிவான விளக்கத்தை அவர் தமது நூலில் தெளிவாகத் தந்துள்ளார். தள்ளுபடியாகாமத்தை சேர்ந்த பிலாத்துவின் நடபடிகள் என்ற புத்தகத்திலும். நாம் பல அறிய” விவரங்களைத் தெரிந்து கொள்கிறோம்.

முதல் மூன்று சுவிசேஷங்களிலும். இயேசுவை சிறைப்பிடித்தது பற்றிய விவரங்கள், ஒவ்வொரு சுவிசேஷத்திலும் ஒவ்வொரு அளவில் எடுத்துரைக்கப்பட்ட போதிலும், ஒரு குறிப்பிடத்தக்க கருத்து அவற்றுள் புதைந்து காணப்படுகிறது. அதாவது, பரிசேயர்கள் இயேசுவை அவரது சொற்களைக் கொண்டே சிக்கவைக்கத் திட்டமிட்டிருந்தனர்.

“அப்போது பரிசேயர் போய் பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணி தங்கள் சீஷரையும் எரோதியரையும் அவரைத்தில் அனுப்பினார்கள். (மத்தேயு 22:15,16)

“இயேசு அவர்களின் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள் ! (மத்தேயு 22:18) என்றார் மாற்கு 12:15 மற்றும் 20:25 ஆகிய வசனங்களையும் இத்துடன் படித்துனரலாம்.

யூத வரலாற்றாசிரியர் இந்தப் பரிசேயர் கூட்டத்தை சேர்ந்தவராகவே தம்மைக் இனம் காட்டிக் கொள்கிறார்.
பரிசேயர் அனுப்பிய சீஷர்கள் ஏரோதியரும், தங்கள் திட்டத்தின் படி இயேசுவிடம் இராயனுக்கு வரி செலுத்துவது பற்றி கேட்டதற்கு அவர், “.... இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.’ (மத்தேயு 22:21)

தாம் வாழ்ந்து வரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்பதைத் தம் சீடர்களுக்கு இயேசு இதன் மூலம் வலியுறுத்தினார். மேலும் யூத சமயத் தலைவர்களின் போக்கைத் தாம் ஆதரிக்கவில்லை என்றும் இக்கூற்றின் மூலம் இயேசு உணர்த்துகிறார்.

அடுத்து வரும் நிகழ்வுகள் நம் கவனத்தை கவருபவை. அவை இயேசு சிறைப் பிடிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பற்றி நமக்குக் கூறுபவை. நான்கு சுவிசேஷங்களிலும் பிலாத்துவால் இயேசு விசாரிக்கப்ப விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தள்ளுபடி ஆகமத்தைச் சேர்ந்த பிலாத்துவின் நடபடிகளில் விசாரணை நடத்திய அக்குழுவின் உறுப்பினர்களான அன்னாசு, கயபாசு, சிமெஸ், ததாயஸ், கமேலியஸ், யூதாஸ், லேவி, நப்தாலிம், அலெக்ஸாண்டர், ஜெய்ரூஸ் ஆகியோர் அடங்கிய பட்டியல் உள்ளது. இப்பட்டியலில் வரும் கயபாசு, யூதேயா மாநிலத்தின் பிரதான ஆசாரியன் (தலைமை போதகர்) என்பதை நாம் அறிவோம். இயேசு குற்றவாளியாவார் என்றும், அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லவேண்டும் என்றும் யூத சமயத் தலைவர்கள் முடிவு செய்ததும் அவர்கள் ரோமானிய ஆளுநர் பிலாத்துவை, இயேசுவின் மீது இறைபழிப்பு, மற்றும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி சிலுவையிலறைந்து கொல்லும்படி வற்புறுத்தினர் (யோவான் 19:7 மற்றும் 15)

கனவு கற்பிக்கும் பாடம்.

இயேசு விசாரிக்கப்பட்டபோது சமயத் தலைவர்கள் பிலாத்துக்கு ஆலோசனைக் கூறி வழி கெடுத்து வந்தனர் என்றும் இயேசுவுக்கு மரண தண்டனை (அதாவது சிலுவை தண்டனை) அளிக்குமளவுக்குத் திருப்திகரமான காரணம் காட்ட அவர்களால் இயலவில்லை என்றும் நான்கு சுவிஷேசங்களும் ஒருமித்துக் கூறுகின்றன. இந்நிலையில் மத்தேயு மட்டும், பிலாத்துவின் மனைவி கிலாடியாவிடமிருந்து (Claudia) பிலாத்துவுக்கு ஒரு செய்தி வந்ததாகவும், இயேசுவைப் பாதிக்கும் எந்தத் தீர்ப்பும் வழங்க வேண்டாமென்றும் அவரைப் பற்றிதான் ஒரு கனவு கண்டதாகவும் நமக்குத் தெரிவிக்கிறார்.

பிலாத்துவின் மனைவி கண்ட கனவைப் பற்றி மத்தேயு கூறுவது என்ன! என்பதைக் காண்போம். ‘அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்கு சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள். (27:19)

பிலாத்துவின் மனைவி தன் கனவை பிலாத்துவுக்குத் தெரிவித்து இயேசுவின் மீது கருணை காட்டுமாறும், அவரை சிலுவையிலிருந்து காப்பாற்றுமாறும் வேண்டிக் கொண்டதாக மேற்கண்ட வசனம் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

பின்னர் பிலாத்து தன் கைகளைக் கழுவியவராக: “இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...’ (மத்தேயு 27:24) என்று கூறி இயேசுவை யூத சமயத் தலைவர்களிடம் ஒப்படைக்கிறார். ஏற்கனவே ஒரு கனவின் மூலம் குழந்தை இயேசு காப்பற்றப் பட்ட விவரத்தை மத்தேயு குறிப்பிட்டுள்ளார். இயேசுவின் குழந்தைப் பருவத்தில் ஏரோது மன்னன், இயேசுவைக் கொள்ள நாடிய போது ஒரு கனவின் மூலம் இயேசுவின் தந்தையாகக் கருதப்பட்டிருந்த யோசேப்பு, குழந்தைக்கு வரவிருந்த பேராபத்தைக் குறித்து எச்சரிக்கப்பட்டதாகவும். அதன் விளைவாகக் குழந்தை இயேசு காப்பற்றப்பட்டதாகவும் மத்தேயு கூறுகிறார். ( 2:13)

இதைப் போன்றே, தம் மனைவியின் கனவினால் உந்தப்பட்ட பிலாத்து இயேசு குற்றமற்றவர் என மன நிறைவு கொண்டு (லூக்கா 23:14), இயேசுவைச் சிலுவை மரணத்திலிருந்து தப்பச் செய்யவும் அவரது உயிரைப் பாதுகாக்கவும். பலவாறு பாடுபட்டுள்ளதாக சுவிஷேசங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.

பிலாத்துவின் நடவடிக்கை

பிலாத்து விசாரணையை வெள்ளிக் கிழமையில் நடத்தியதுடன், அன்று மாலையில்தான் இயேசுவைச் சிலுவையிலறைய உத்தரவிட்டார். அன்று மாலையே இன்னும் சில மணி நேரத்தில் சபாத் நாள் தொடங்கிவிடும் என்பதை ஏற்கனவே நன்கறிந்துள்ள பிலாத்து, சிறைப் பிடிக்கப்பட்ட இயேசுவை விசாரிக்க, வெள்ளிக் கிழமையை தேர்ந்தெடுத்துள்ளார். என்பது நம் கவனத்திற்குரிய கருத்தாகும். ஏனெனில் வெள்ளி மாலை தவிர வேறந்த நாளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும் அவரைச் சிலுவையைவிட்டுக் கீழே இறக்கும் வாய்ப்பும், அதன் மூலம் அவர் உயிர் தப்பும் சந்தர்ப்பமும் அவருக்குக் கிடைத்திருக்காது.

பிலாத்து இயேசுவின் விசாரணையை நீட்டிக் கொண்டே சென்றார்: அல்லது கால தாமதப்படுத்தினார். அதனால் வெள்ளிக் கிழமை மாலையில்தான் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அன்று மாலை சபாத் தினம் தொடங்குவதால் சிலுவையில் தொங்கும் கால அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டது. எனவே இயேசுவுக்குச் சிலுவையில் கிடந்தது உயிர் துறக்கும் வாய்ப்பும் குறைந்துவிட்டது.

சிலுவை தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு ஆளுநர் பிலாத்துவால் அங்கு நியமனம் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கதிபதி, இயேசுவிடம் அனுதாபத்துடன் நடந்துகொண்டார். இயேசு குற்றமற்றவர் என நம்பினார். ‘நூற்றுக்கதிபதி சம்பவத்தைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். ( லூக்கா 23:47)

சிலுவை தண்டனைப் பெற்ற மற்ற இரு குற்றவாளிகளின் கால்களும் முறிக்கப்பட்ட பின்னர் அவர்களின் உடல் சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. ஆனால் இயேசுவின் கால்கள் முறிக்கப்படவில்லை. (யோவான் 19:33)

அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் உறவினரல்ல: இருப்பினும் நடைமுறைக்கு மாற்றமாக, பிலாத்து இயேசுவின் உடலை எந்தக் கேள்வியுமின்றி அரிமத்தியா யோசேப்பிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார். (மத்தேயு 27:58)

அரிமத்தியா யோசேப்பு, இயேசுவின் உடலைத் தமக்குச் சொந்தமான ஒரு கல்லறையில்தான் வைத்தார். (மத்தேயு 27:60) யூத வழக்கப்படி பூமியைச் தோண்டிப் புதைத்துவிடவில்லை. மேலும் பொது அடக்கஸ்தலத்தில் மற்றவர்களுடன் சேர்த்து அவரது உடல் புதைக்கப்படவுமில்லை.

நிக்கொதேமு வெள்ளைப் போளமும், கரிய போளமும் கலந்து நூறு இராத்தல் உடனடியாகக் கொண்டுவந்தார். (யோவான் 19:39) இந்த நாட்டு மருந்துக் கலவை இயேசுவின் உடல்மீது பூசப்பட்டது. இவை யாவும் ஆளுநர் பிலாத்துவுக்குத் தெரியாமல்தான் நடந்தது என்று கூறமுடியாது.

யோசேப்பும், நிக்கொதேமுவும்.

பிலாத்துவைப் போன்றே, அரிமத்தியா யோசேப்புக்கும் இயேசுவைப் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றுவதில் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு. இவரை குறித்து சுவிசேஷங்கள் கூறுவது என்ன!

அரிமத்தியா யோசேப்பு யூத சபையின் ஒரு செல்வாக்கு மிக்க அங்கத்தவராவார். அவர் செல்வந்தர் என்றும் இயேசுவை மனதிற்குள் ஏற்றுக் கொண்டவரென்றும் நம்புவதற்கு அடிப்படை காரணங்கள் உண்டு. அவர் இயேசுவுக்கு சீஷன் என்கிறார் மத்தேயு. தேவனுடைய ராஜ்ஜியம் வரக் காத்திருந்தவன் என்றும், கனம் பொருந்திய ஆலோசனைக் காரனென்று மாற்கும், லூக்காவும் கூறுகிறார்கள். யூதருக்கு பயந்ததினால் இயேசுவின் அந்தரங்க சீஷன் என்கிறார் யோவான். வெளிப்படையாக அவர் இயேசுவின் சீடராக நடந்து கொள்ளவில்லை என்றாலும் இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து காப்பற்றும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பாலஸ்தீனத்தில் யூதேயா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்று ஆண்டு வந்த ரோமானியரான பொந்தியு பிலாத்துவை நேரில் சந்திப்பதற்கும் அவரது ஆதரவை பெறுவதற்கும் சக்தி பெற்றவராக சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவராக விளங்கினார். இருப்பினும், அரசியல் பலமோ, பண பலமோ சமூக அந்தஸ்தோ இயேசுவை காப்பாற்ற உதவாது என்பதை அவர் நன்கறிந்ததிருந்ததால் இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து தப்பச் செய்ய ரகசியமாக சில பணிகளை மேற்கொண்டார்.

அரிமத்தியா யோசேப்பின் நண்பராக விளங்கியவர் நிக்கோதேமு என்பவர். யோவான் தமது சுவிசேசத்தில் கூறியுள்ள இயேசுவின் சீடர் பட்டிலயலில் இவருடைய பெயர் இல்லையாயினும், இவர் இயேசுவின் இரகசிய சீடராக பணியாற்றி வந்தார். இவரும் அரிமத்தியா யோசேப்பைப் போன்று எஸ்ஸீன் சகோதரர்களைச் சார்ந்தவர்களாகவே இருக்கவேண்டும். இயேசுவின் மூன்று முக்கிய பிரிவுகளாக விளங்கிய யூதர்களின் கூட்டத்தில், ஒரு பிரிவினரே எஸ்ஸீன்கள் என்றும் மற்ற இரு கூட்டத்தார் பரிசேயர் மற்றும் சதுசேயர்கள் என்றும் ஏற்கனவே கண்டோம்.

எஸ்ஸீன்களின் தலையீடு

எஸ்ஸீன்கள் சமாதான வாழ்வில் அதிக நாட்டமுடையவர்கள். அதன் அடையாளமாக அவர்கள் எப்போதும் வெள்ளை உடை உடுத்துபவர்களாக இருந்தார்கள். தாடியுடன் காட்சி தந்தனர். மூலிகை மருத்துவத்தில் தேர்ந்திருந்தனர். பெருமளவில் சமயப் பற்றுடையோராகவும், நேர்மையான நடைத்தையுடையோராகவும் விளங்கினார்கள். உலக பற்றிலிருந்தும் விலகி இருந்தனர். இறை வணக்கத்திலும், இறை தியானத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மனித குலத்திற்கு தொண்டாற்றியவர்களாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இயேசுவும் அவரது ஆரம்பக்கால சீடர்கள் பலரும் இந்த எஸ்ஸீன் பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர் என நம்புவதற்கு இடமுள்ளது.

இந்த எஸ்ஸீன் சகோதரர்கள் உடலெங்கும் காயங்களுடனிருந்த இயேசுவின் மீது பூசும் பொருட்டு வெள்ளைப்போளம், கரியபோளம் என்ற மூலிகை மருந்துப் பொருட்களை முன்னதாகவே திரட்டி வைத்திருந்தனர். எனத் தெரிகிறது. மருந்தின் அளவோ, குறைந்த அளவோ அல்ல நூறு இராத்தல், ‘ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப் போளமும் கரிய போளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டு வந்தான். (யோவான் 19:39)

மேலும் மருந்து கலவை பூசப்பட்ட ஒரு லினன் துணி சவப்போர்வையாக ஆயத்தப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. ‘அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து யூதர்கள் அடக்கம் பண்ணும் முறையின்படியே அதைச் சுகந்தவர்கங்களுடன் சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். (யோவான் 19:40)

இயேசு கல்லறையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்போது மேற்சொன்ன இரு மருந்துப் பொருட்களும், சவப் போர்வையின் மருந்துக் கலவையும், அவர் விரைந்து உடல் நலம் பெற உதவின. இதுவரையில் எவரும் வைக்கப்படாத அரிமத்தியா யோசேப்புக்கு சொந்தமான ஒரு கல்லறையில்தான் இயேசுவின் உடல் கிடத்தப்பட்டது. மத்தேயு அக்கல்லறையைப் பற்றி கூறும்போது அரிமத்தியா யோசேப்பு ...’தான் கன்மலையில் வெட்டி இருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே வைத்து....’ சென்றதாக கூறுகிறார். (27:60)
லூக்கா “.... ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறை...” என்கிறார் (23:53)

பிலாத்து கையாண்ட வழிமுறை

ரோமானிய ஆளுநர் “பொந்தியு பிலாத்து, இயேசு கிறிஸ்துவைச் சிலுவை மரணத்திலிருந்து தப்புவிக்கப் பெருமளவு முயன்றுள்ளார் என்ற உண்மை புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களைச் சிரத்தையுடன் படிப்போருக்கு புலப்படும். ஏரோது இயேசுவை விடுவித்துவிடுவான் என்ற நம்பிக்கையில், பிலாத்து ஆரம்பக் கட்டத்தில் இயேசுவை ஏரோதிடம் அனுப்பி வைத்துள்ளார். (லூக்க 23: 6-9)

தனது நம்பிக்கை பொய்த்தும் பிலாத்து மேலும் மூன்று முறை இயேசுவை விடுவிக்க முயற்ச்சிகள் மேற்கொண்டார். ஆயினும் அவை வெற்றி பெறவில்லை. (லூக்கா 23:22-23)

அதன்பின்னர் பிலாத்து மேலும் நுண்ணிய வழிமுறைகளை கையாளத் தொடங்கினார். இயேசுவை சிலுவையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஓர் உணர்வு பிலாத்துவுக்கு தோன்றுவதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று யோவான் சுவிசேசகன் கூறுவது போன்று அவரது நியாய உணர்வு. (யோவான் 18:31) மற்றொன்று, பிலாத்துவின் மனைவிதான் கண்ட கனவின் அடிப்படையில் இயேசுவை தண்டிக்கவேண்டான் எனப் பிலாத்துவுக்கு அனுப்பிய செய்தி (மத்தேயு 27:19)

எனவே பிலாத்து ரோமானிய நூற்றுக் கதிபதியிடம் இயேசுவின் உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்குமாறும், அவரது கால்களை வெட்டாதிருக்குமாறும் இயேசுவின் உடலை ஒப்படைக்குமாறும் அரிமத்தியா யோசேப்பு மூலம் ஓர் அனுமதியை வழங்கியுள்ளார். வழக்கமாக இத்தகைய அனுமதி அல்லது உத்திரவு மற்றொரு ரோமானிய அதிகாரி மூலமே அனுப்பி வைக்கப்படும். பிலாத்து தனது அதிகாரிகளுக்கு இயேசுவின் உடலை அரிமத்தியா யோசேப்புவிடம் வழங்குமாறு உத்தரவிட்டதையும், வழக்காமாக இயேசுவின் உடலைப் பெறும் உரிமை இயேசுவின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே உண்டு என்பதையும் இங்கு மீண்டும் நியாபகத்தில் கொள்வது பொருத்தமே.

நூற்றுக்கதிபதியின் ஒத்துழைப்பு

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னரே, ரோமானிய நூற்றுக்கதிபதி அவரை நன்கறிந்தவராக இருந்ததாலேயே இயேசுவின் சடலத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த சவப்போர்வையின் ஒரு பகுதி அவருக்கு வெகுமதியாகத் தரப்பட்டது என்று கருத இடமுள்ளது. மேலும் பின்னொரு காலத்தில் கப்படோசியவின் பிஷப்பாகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார் எனவும் நம்பப்படுகிறது.

இயேசுவையும், அவரது போதனைகளையும் இந்த நூற்றுக்கதிபதி ஏற்கனவே அறிந்திருந்ததால் ரோமானியப் போர்ச் சேவகர்கள் இயேசுவின் கால்களை வேட்டிவிடாத வண்ணம் அவர் தடுத்திருக்கவேண்டும். (யோவான் 19:33)
இயேசுவின் விலாப்புறத்தை ஈட்டியினால் குத்திய அந்த நேரத்தில் இயேசுவின் உடலிலிருந்து இரத்தம் வெளியேறியதைக் கண்டு இயேசுவின் உடலில் உயிர் உள்ளது என்பதை நூற்றுக்கதிபதி நன்றாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறிருந்தும் அவரது உடலை சிலுவையைவிட்டு கீழே இறக்கி அரிமத்தியா யோசேப்புவிடம் வழங்கத் தாராளமாக அனுமதித்துவிட்டு இயேசு இறந்துவிட்டதாக (மார்க்கு 15:44-45) பிலாத்துவுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இயேசுவை நன்றாக அறிந்திருந்து அவரது பேரில் அனுதாபம் கொண்ட ஒருவராலேயே இவ்வாறு நடந்து கொள்ளமுடியும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா!

காவலர்கள் எதற்க்காக!

இயேசுவின் கல்லறைக்கு ஒரு காவலாளியை நியமிப்பதற்கு யூதர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியிலிருந்து இயேசு மரணித்துவிட்டார் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லை என்பதை விளங்குகிறது. அவர் நிச்சயமாக மரணித்துவிட்டார் என்ற உறுதி அவர்களுக்கு ஏற்ப்பட்டிருந்தால் அவருடைய உடம்பை சீஷர்கள் திருடிக் கொண்டு சென்றால் கூட அவர்கள் பொருள்படுத்தி இருக்கமாட்டார்கள். “அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவனைக் களவாய்க் கொண்டு போய் மரித்தோரிலிருந்து எழுந்தார் எழுந்தான் என்று ஜனங்களுக்கு சொல்லாதபடி .... (மத்தேயு 27:64)

கல்லறையில் காவலர்கள் நிறுத்தப்பட்டதற்கு சொல்லப்படும் காரணங்கள் அறிவற்ற ஒருவனது பிதற்றலாகவே இருக்கிறது. அக்கூற்று படு முட்டாள்தனமானது என்பதைச் சிந்திக்கும் திறனுள்ளோர் எவரும் எளிதில் புரிந்து கொள்வர். இயேசுவைக் கொன்றுவிட வேண்டும் என்ற கொள்கையை யூதர்களின் ஒரு பிரிவு விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருந்தது என்பதும், அதற்காக அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தனர் என்பதும் யாவரும் நன்கறிந்த உண்மையாகும். இந்நிலையில் இவ்வளவு விரைவில் இயேசு காலஞ்சென்றுவிட்டார் என்பதை யூதர்கள் எவ்வாறுதான் நம்பினார்களோ தெரியவில்லை. இயேசுவின் மரணச்செய்தி அவர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அவர்களின் உள்ளத்தில் சந்தேகத்தை விளைவித்துவிட்டது. இதனைக் குறித்தே திருக்குர்ஆன் “அவர்களுக்கு அது சந்தேகத்திற்குரியதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதில் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் நிச்சயமாக இதுபற்றி ஐயத்திலேயே இருக்கின்றனர். (4:158)