அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

லா நபிய்ய பஹ்தி ஹதீஸிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்

 
லா நபிய்ய பஹ்தி என்ற ஹதீஸிற்கு இனி இறுதிநாள் வரை எந்த ஒரு நபியும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள்(?) கொடுக்கும் விளக்கமாகும். ஆனால் இவர்களின் இந்த கூற்றுகளை கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

ஷைஹுல் இமாம் இப்னு கத்தீபா (ஹிஜ்ரி 267)

ஹஸ்ரத் ஆயிஸா (ரலி) அவர்களின் கூற்று ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு முரண்பட்டதல்ல; ஏனென்றால் தமக்குப் பிறகு தாம் கொண்டு வந்த ஷரியத்தை இரத்து செய்யக் கூடிய ஒரு நபியும் தோன்றமாட்டார்கள். என்பதுதான் இந்தத் திரு நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுத்திய கருத்தாகும்.

அதாவது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் நபி (ஸல்) அவர்களை காத்தமுன் நபியீன் என்று கூறுங்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு நபி இல்லை என்று கூறாதீர்கள். ( துர்ரே மன்சூர் பாகம் 5, பக்கம் 204)

ஹஸ்ரத் இமாம் முஹம்மத் தாஹிர்


இஸ்லாமிய பேரறிஞரான ஹஸ்ரத் முஹம்மத் தாஹிர் அவர்கள் ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றுக்கு விளக்கம் அளிக்கிறார்கள்:

“இறுதி காலத்தில் தோன்றும்’ முன்னறிவிக்கப்பட்ட மஸீஹ் ஒரு நபியாகத் தோன்றுவார் என்பதற்கு ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் மேற் குறிப்பிட்ட வசனம் சான்றாகத் திகழ்கிறது. இது ‘லா நபிய்யா பஹ்தி’ என்ற நபி மொழிக்கு முரண்பட்டதல்ல ஏனென்றால் தமக்குப் பிறகு தமது ஷரியத்தை இரத்து செய்யும் நபி எவரும் தோன்றமாட்டார் என்பதுதான் என்பதுதான் இந்த வசனத்தில் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. (தக்மிலா பக்கம் 85)

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் இரண்டு காரணங்களுக்காகவே மேலே சொன்னவாறு கூறியதாக ஹஸ்ரத் இமாம் முஹம்மது தாஹிர் விளக்குகிறார்கள். ஒன்று ‘லா நபிய்ய பஹ்தி’ என்பதற்கு ‘எந்த விதமான நபியும் தோன்ற மாட்டார்கள்’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்றால் இறுதிகாலத்தில் தோன்றும் ஈஸா எப்படி தோன்ற முடியும்.? லா நபிய்யா பஹ்தி என்பது லாயே ஜின்ஸு(எந்த விதமான நபியுமில்லை) இல்லை என்றால் ஒரு விதமான நபியும் (பழையவரோ, புதியவரோ) தோன்றமாட்டார். தோன்றக் கூடாது என்ற பொருள்தான் கிடைக்கும். அரபி அகராதி கூறும் சட்டமும் இதுதான். இங்கு லா யஹூனு பஹ்தி நபியுன் என்று கூறப்படவில்லை. இவ்விரண்டிற்கும் (லா நபிய்ய பஹ்தி – லா யஹூனு பஹ்தி நபிய்யுன்) இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. ‘எனக்குப் பிறகு எந்த நபியும் தோன்றமாட்டார்கள்’ என்று கூறப்படவில்லை.

இமாம் அப்துல் வஹ்ஹாப் (ஹிஜ்ரி 976)


லா நபிய்ய பஹ்தி என்ற ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கும் போது இவ்வாறு கூறுகிறார்கள்.
‘லா நபிய்ய பஹ்தி, லா ரஸுல பஹ்தி’ என்ற நபி மொழியின் பொருள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ‘புதிய ஷரியத்துடன் எவரும் தோன்றமாட்டார்கள்’ என்பதாகும். (அல் யவாக்கீத் வல் ஜவாஹிர் பாகம் 2 பக்கம் 35)

ஹஸ்ரத் முல்லா அலியுல் காரீ:

மிஷ்காத் ஷரீபுக்கு விளக்கம் எழுதி புகழ் பெற்ற அஹ்லே சுன்னத்தின் இமாம் முல்லா அலியுல் காரீ அவர்கள் கூறுகிறார்கள்.

‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு உலமாப் பெருமக்கள் கொடுக்கும் விளக்கம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யக் கூடிய நபி தோன்ற மாட்டார் என்பதாகும். (அல் கஷாஅத் பீ அஷ்ர அத்திஸ் ஸாஅத்தி பக்கம் 260)

மேற்கூறப்பட்ட இஸ்லாமியப் அறிஞர்கள் அனைவரும் லா நபிய்ய பஹ்தி க்கு கொடுத்த அதே விளக்கத்தைதான் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களும் கொடுக்கிறார்கள்.

ஹஸ்ரத் ஷா வலியுல்லா முகத்தஸ் தஹ்லவி

லா நபிய்ய பஹ்தி ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கும்போது கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கருத்துப் படி லா நபிய்ய பஹ்தி வ லா ரஸுல் என்ற நபி மொழிக்கிணங்க முடிவுபெற்றிருக்கும் நபித்துவம் ஷரியத்துடைய நபித்துவமேயாகும். (குற்றத்துள் ஜனைனி பக்கம் 319)

ஹஸ்ரத் பாஹ்பிஸ் பர்குர்தர்

காதிரிய்யா தரீக்கத்தின் இமாமாக விளங்கும்
அறிஞரான இவர் லா நபிய்ய பஹ்தி க்கு கொடுக்கும் விளக்கம்:

இந்த திருநபி மொழியின் பொருள் எனக்குப் பிறகு ஷரியத்துடன் எந்த நபியும் தோன்றமாட்டார்கள். அல்லாஹ் நாடும் வரை அன்பியாக்களை அனுப்புவான். (நிப்ராஸ் பக்கம் 445)

ஹஸ்ரத் நூருல் ஹசன்கான்

அஹ்லே ஹதீஸின் அறிஞரான இவர் ‘லா நபிய்ய பஹ்தி’ நபி மொழிக்கு பின்வருமாறு விளக்கம் கொடுக்கிறார்.

“லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு இஸ்லாமிய அறிஞர்கள் தரும் பொருள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் ஷரியத்தை ரத்து செய்யும் நபி தோன்றமாட்டார் என்பதாகும். (இக்திறா பஸ்ஸா அதி பக்கம் 162)

இங்கு அது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என குறிப்பிடுகின்றார். அதே போன்று ஷா வலியுல்லா முகத்தஸ் அவர்களும், ஹஸ்ரத் முல்லா அலியுல் காரீ அவர்களும் ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழியைப் பற்றி தங்கள் கருத்தை தெரிவிக்கும் போது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தும் அதுவாகும் என்று கூறுகிறார்கள்.

ஹஸ்ரத் இப்னு அரபி


லா நபிய்ய பஹ்தி என்ற என்ற ஹதீஸிற்கு விளக்கம் அளிக்கும் போது கூறுகிறார்கள்.

அதாவது நுபுவ்வத் முற்றிலுமான உயர்ந்து போகவில்லை. எனவேதான் ஷரியத்துடைய நுபுவ்வத் மட்டும் முற்று பெற்றுவிட்டதாக கூறுகிறோம். ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற ஹதீஸிற்கு ‘எனக்குப் பிறகு புதிய ஷரியத்துடன்’ ஒரு நபியும் இல்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். இது எவ்வாறென்றால் இந்த கிஸ்ரா (அரசர்) மரணித்தால் வேறு கிஸ்ரா இல்லைஎன்றும் இந்த கைஸர் மரணித்தால் வேறு கைஸர் இல்லை என்றும் நபி (ஸல்) அவர்களின் கூறியிருப்பது இதற்க்கு சான்றாகும். (புத்துஹாத்தே மக்கிய்யா பாகம் 2. அத்தியாயம் 73) நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் கிஸ்ரா மரணித்தார் பிறகு வேறொரு கிஸ்ரா தோன்றினார்: அதேபோன்று கைஸர் மரணித்தபிறகு ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கைஸர் அரசர்கள் தோன்றிக் கொண்டே இருந்தார்கள். அதே போன்றுதான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஷரியத்துடைய நபி – மார்க்க சட்டம் கொண்டு வரும் நபி இனி தோன்றமாட்டார் என்பதை மார்க்க அறிவுடையோர் புரிந்து கொண்டனர்